இன்றைய தியானம்(Tamil) 23-02-2022 (God’s creation’s special)
இன்றைய தியானம்(Tamil) 23-02-2022 (God’s creation’s special)
சுகந்த வாசனை
“...சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது... ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு.... அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும்... ஒப்பாயிருக்கிறது…” – சங்கீதம் 133
இவ்வுலகிலே, பலதரப்பட்ட நிலையிலுள்ள தேவபிள்ளைகள், தங்கள் பணம், பதவி, பட்டம், செல்வாக்கு போன்ற நிறைகளையோ அல்லது குறைவுகளையோ பின்னுக்கு தள்ளிவிட்டு, தங்களைத் தாழ்த்தி ஒருமனமாய் ஓரிடத்தில் ஒருமித்து வருவது ஆரோனின் சிரசின்மேல் ஊற்றப்பட்ட அபிஷேகத் தைலமாகிய எனக்கு ஒப்பிடப்படுகிறது. ஆம், நான்தான் சுகந்த வாசனை தரும் அபிஷேகத் தைலம் பேசுகிறேன். என்னை விலையுயர்ந்த உயர்தர நறுமணப் பொருட்களாகிய வெள்ளைப்போளம், கருவப்பட்டை, வசம்பு, இலவங்கப்பட்டை, ஒலிவ எண்ணெய் என உயர்குடி மக்கள் பயன்படுத்தும் இந்த அரிதான பொருட்களை வைத்து தயார் செய்கிறார்கள். என்னைக் கொண்டு யூதர்கள் தேவனுக்கென்று பிரித்தெடுக்கப்பட்ட ஆசாரியர்களையும் தேசத்தை ஆளும் ராஜாக்களையும் அபிஷேகம் செய்கிறார்கள்.
தேவ பிள்ளைகள் ஒருமனதோடு ஓரிடத்தில் கூடிவந்து ஆராதிக்கும்போது ஆவியானவர் அவர்கள் மீது இறங்குவதை “பரிசுத்த ஆவியின் அபிஷேகம்” என்று வேதத்தில் பார்க்கிறோம். நான் ஏன் இவ்வளவு புகழ்வாய்ந்தவனாகவும் விலையேறப்பெற்றவனாகவும் இருக்கிறேன் தெரியுமா? அந்த உயர்தர நறுமணப் பொருட்களை எல்லாம் அரைத்து, ஆண்டவர் சொன்னபடி சரியான அளவின்படி கலந்து இருப்பதால்தான் நறுமணம் உள்ளவனாக இருக்கிறேன். ஆனால் ஒரு வருத்தமான செய்தி என்னவென்றால், என்னுடைய நறுமணத்தைக் கெடுக்க ஒரு செத்த ஈ போதுமானதாக இருக்கிறது.
இதை வாசிக்கின்ற அன்பு சகோதர சகோதரிகளே! உங்கள் குடும்பத்திலும், சமுதாயத்திலும், சபையிலும் உங்கள் குணம் எப்படி இருக்கிறது? உங்கள் சுயங்களையெல்லாம் உடைத்து தாழ்மையோடு எல்லோரோடும் சேர்ந்து கிறிஸ்துவின் வாசனையை வெளிப்படுத்தும் நறுமணம் தரும் அபிஷேகத் தைலமாக இருக்கிறீர்களா? அல்லது நறுமணத்தை கெடுக்கும் செத்த ஈ யாக இருக்கிறீர்களா? நாம் குழுவாக இருக்கும்போது மற்றவர்களோடு ஒத்துப்போவது சற்றுகடினம்தான். இதற்குக் காரணம் நம்முடைய மாம்சீக சுபாவமே! குறிப்பாக பெருமைதான். ஆனால் தேவ பலத்தைக் கொண்டு பரிசுத்த ஆவியின் உதவியால் வசனம் என்னும் சம்மட்டி கொண்டு பெருமையை உடைத்து நம்மை சுற்றியுள்ளவர்கள் மத்தியில் வாசனை வீசும் சிறந்த தைலமாக மாறுவோம்.
- S. மனோஜ்குமார்
ஜெபக்குறிப்பு:
சங்கிலித்தொடர் ஜெபத்தின் மூலம் அநேக புதிய ஜெபக் குழுக்கள் ஆரம்பிக்கப்பட ஜெபியுங்கள்.
Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250